கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை.
சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள் தரப்பில் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்க வாய்ப்பில்லை. புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் தருவதாகச் சொல்லி வன்னி மீது படையெடுத்த கடந்த 11 மாதங்களில் கிழக்கை மீட்டது போல எளிதாக வடக்கையும் மீட்டு விடலாம் என்றே சிங்கள அரசு படை திரட்டி போரில் குதித்தது. 2008 டிசம்பர் நத்தார் பண்டிகைக்கு முன்பு கிளிநொச்சியை மீட்டு இலங்கை மக்களுக்கும் ராணுவ துருப்புகளுக்கும் நல்ல செய்தி சொல்லலாம் என நினைத்தார் ராஜபக்ஷே. ஆனால் அவரும் அவரது சகாக்களும் கனவு கண்டதைப் போலல்ல புலிகளின் இதயப்பகுதியும் புலிகள் கொடுத்த பரிசும்.
வன்னி அடங்க மறுத்தது. ராணுவம் குறித்த காலக்கெடு கடந்து படையினர் பேரிழப்புகளை சந்தித்தார்கள். வன்னி மீதான படையெடுப்புக்கு இலங்கை பலி கொடுத்தது பல்லாயிரம் ராணுவச்சிப்பாய்களின் உயிர்களை. புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும்போது ராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது ராணுவம். மேலோட்டமாக பார்க்கும் ராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.
சரி போராளிகள் தரப்பிற்கு என்ன இழப்பு எனப் பார்த்தால், ஆனையிறவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பெற்று அதனூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலம் என்பது ஈழத்தில் அமைதி நிலவிய மிக நீண்ட காலமாக இருந்தது. அந்தக் காலத்தில் புலிகளும் சரி ராணுவமும் சரி தங்களின் ராணுவ பலத்தை சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டனர். புலிகள் தங்களை மரபு வழிப்பட்ட போர் முறைக்கு தயார்படுத்தினர். விமானப் படையை வடிவமைத்த புலிகள் தென்கிழக்கின் கவனத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார்கள். அதே சமயம் ரணிலுக்குப் பிறகு வெளிப்படையான இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தா ஆட்சிக்கு வந்த பிறகு புலிகளுக்கு ஏற்படுத்திய முதல் நெருக்கடி சர்வதேச அளவில் புலிகளை ஏராளமான நாடுகளில் தடை செய்ய வைத்ததுதான்.
உண்மையில் நார்வே முன்னெடுத்த பேச்சுக்களில் தந்திரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டது இலங்கை அரசுதான். பேச்சுவார்த்தை மேஜைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களைக் கூட நடைமுறைப்படுத்தாமல் ராணுவ ரீதியாக பலம் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. (அதற்குள் புலிகளைப் பிளவுபடுத்தி கருணாவை புதிய மீட்பராக உருவாக்கினார்கள்) பேச்சுவார்த்தைக் காலத்திலேயே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் ராணுவத்துக்குமான மோதல் வெடித்தாலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை கொன்றது ராணுவ ஆய்வாளரும் பத்திரிகையாளருமான தராக்கியை கொன்றது என ராணுவம் வெளிப்படையான போருக்கு தயாரானது. புலிகளும் பழிக்குப் பழியாக லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றார்கள்.
இந்நிலையில் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கிழக்கை மீட்போம் என்று அறிவித்தது. புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கருணா குழுவின் துணையோடு கிழக்கு மீட்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசு ஆதரவு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கில் வசந்தம் வந்ததாக ராணுவமும் ராஜபக்சேவும் சொல்லிக் கொண்டாலும் அன்றாடம் ஆள்கடத்தல், கொலைகள், இஸ்லாமிய, தமிழர் மோதல் என கிழக்கு வன்முறைக் காடாகவே இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திறந்தவெளிச் சிறையான யாழ்பாணத்தைப் போல இப்போது கிழக்கும் மாறியிருக்கிறது, நாளை வடக்கும் மாறலாம். கிழக்கின் ஆட்சி கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கிழக்கில் கொடுத்த வசந்தத்தை வடக்கில் கொடுப்பதாக கடந்த செப்டம்பரில் வன்னிப் பிரதேசம் மீது படையெடுத்தது இலங்கை ராணுவம்.
முதலில் 74 மணிநேரத்திற்குள் வன்னியை மீட்பதாகச் சொன்ன ராணுவம் பல மாதம் போராடி கிளிநொச்சியை மீட்டிருக்கிறது. நடந்த போர் முறையைப் பார்க்கும் போது புலிகள் அதிக இழப்புகளுக்கு முகம் கொடுக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவின் எதிர்காலம் கூட ராணுவத்தால் கேள்விக்குள்ளாகும்போது மரபார்ந்த ராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த அலம்பில் காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது. ஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது? வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமான படையினரோடு ஓடிப் போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்திக் கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்கு காப்பாற்றப் போகிறது என்பதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான். ஒரு மாதத்திற்கு முன்பே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் அறிவிக்கும்போது கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும் என்றார். ஆனால் இலங்கை அரசின் அதிகபட்ச ஆசையால் அவர்கள் பிரபாகரனை சரணடையக் கோருகிறார்கள். போரின் வெற்றியை தேர்தலில் அறுவடை செய்வது, புலிகள் மீதான பிம்பங்களை உடைப்பது என்பதன் பிரச்சாரமாக மகிந்தா இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சில ஆயிரம் சதுர கிலோமீட்டரைப் பிடிக்க இலங்கை ராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என ஏழு நாட்டு ராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை ராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது; இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான். ஏனென்றல் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பல விதமான கவிதைகள், உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எறிந்து விட்டு இலங்கைக்கு ராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.
ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம்போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள். ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித்திரிவதைத் தவிர இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை.
இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக்காரர்தான் டாக்டர் ராமதாசும். மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி ராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்; அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை ராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.
2002-ல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்டபோது இந்தியா தலையிட்டுதான் இலங்கை ராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது, 'அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது' என்று. அதே சமயம் தனது ராணுவத் தளபதிகளை இலங்கை கள முனைக்கு அனுப்பி, கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தாவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?
ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்கிற கருணாநிதி இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதே வேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறி கொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாகப் பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை, இழப்புகளை, துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.
கடைசியாய் ஒரு சிறு குறிப்பு
கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விவகாரத்தில் துரோக நாடகங்களைத் தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்குப் போகச் சொல்லிக் கேட்டது, அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.அது சாம்பல் மூடிய நெருப்பு, என்றாவாது எரிந்தே தீரும்...
copy from tamilwin
Sunday, January 4, 2009
கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன்...
களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகளை எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் யாழ். குடாநாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்ந்த மாவட்டத்தின் பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கிளிநொச்சியின் இராணுவக் கேந்திரத்தன்மையை 1984 ஆம் காலப்பகுதியில் உணர்ந்ததனாலேயே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கிளிநொச்சியில் தங்கியிருந்து போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டவேளை 1985 ஆம் காலப்பகுதியில் கிளிநொச்சி இராணுவப் பொலிஸ் நிலையம் மீது முதலாவது வாகன குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் கிளிநொச்சி நகரத்தின் மீதான அழிவுத் தாக்குதல்கள் ஆரம்பமாகி இன்றுவரை அந்நகரம் மாறிமாறி மிகப்பெரும் அழிவுகளைச் சந்திப்பது அந்நகரத்தின் துரதிஷ்டமே.
வடமாகாணத்தின் முக்கியமான விவசாய வர்த்தக நகராக உருவெடுத்த கிளிநொச்சி பின்நாளில் தமிழரின் இராஜதந்திர நகரம் என்று உலகளாவிய ரீதியில் அறியப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அபரிமிதமானது. 1985ஆம் ஆண்டு வாகனக் குண்டுத் தாக்குதலுடன் ஆரம்பமாகிய கிளிநொச்சி மீதான படைநடவடிக்கைகள் இந்திய இராணுவ வருகையுடன் மேலும் சிதைவுகளைச் சந்தித்தது. இந்திய இராணுவம் வெளியேறியபின் 1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றுவதற்காக புலிகள் இயக்கம் உக்கிரமான முற்றுகைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
அப்போது இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இதனைப்பயன்படுத்தி கிளிநொச்சியிலிருந்த இராணுவத்தினர் ஆனையிறவுக்குத் தப்பிச்சென்றனர். இந்த இரு பகுதியினரும் மேற்கொண்ட மீட்புச் சண்டையினால் கிளிநொச்சி நகரம் இரண்டாவது தடவையாகவும் பெரும் அழிவைச் சந்தித்தது. ஆனால் இதன்மூலம் ஆனையிறவுக்குத் தெற்கே கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
கிளிநொச்சி மீண்டும் புத்துயிர் பெற்று வன்னியின் வர்த்தக மையமாக வளர்ச்சியடையத் தொடங்கிய போதிலும் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் யாழ். குடா புலிகளின் கையிலிருந்து நழுவியபின் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாமை புலிகள் மீட்டுவிட, அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் கிளிநொச்சி மீது 1996 இல் சத்ஜெய 01, 02, 03 என மூன்று மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே ஏ9 வீதியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வரை கைப்பற்றியது.
1997 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல் தாக்குதல்கள் அதிகரித்தன. யாழ்ப்பாணத்திற்கான கடற்போக்குவரத்திற்கு கடற்புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் தடையினால் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு யாழ்ப்பாணற்கான தரைவழிப்பாதை திறப்பு எனக்கூறிக் கொண்டு 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 பாதையூடாக மாங்குளத்தைக் கடந்து கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் மாங்குளம் வந்தவர்களும் கைகுலுக்குவதற்கு தயாரான போது, கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 1998 ஆண்டு ஜனவரி மாதம் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல், அதன் பின்னர் 1998 செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி நகரத்தின் மீது புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 2 நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் வந்தது.
ஆனால், 1985 இலிருந்து 1998 செப்டெம்பர் வரை கிளிநொச்சி நகரம் கண்ட பல இராணுவப் பலப்பரீட்சைகளும், அதனால் மூண்ட கடும் சண்டைகளும் அந்நகரத்தினை மண்மேடாக்கிவிட்டுப் போய்விட்டது. 1998 செப்டெம்பர் கிளிநொச்சி நகரம் புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் அது இராணுவ தாக்குதல் வளையத்துக்குள் தொடர்ந்தும் உட்பட்டதாகவே இருந்தது.
1999 நவம்பர் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பை புலிகள் கைப்பற்றியதோடு கிளிநொச்சிக்கான அச்சுறுத்தலாக இருந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளமும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பரப்பளவும் அதாவது இரணைமடுச் சந்தியிலிருந்து முகமாலை வரையான பகுதிகள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.
போரின் கோரவடுக்களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கிற்று. அத்தோடு வன்னிக்கான நிர்வாக மையமாகவும், விடுதலைப்புலிகளின் நிர்வாக மையமாகவும் மாற்றமடையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது, தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் மூலம் புலிகளால் நிலைநிறுத்தப்பட்ட இராணுவச் சமநிலையும், இதனால் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையும் சர்வதேச இராஜதந்திரிகளின் கிளிநொச்சி வருகையும், அவர்களின் சமரசப் பேச்சுக்களும் கிளிநொச்சியை சர்வதேச அளவில் புலிகளின் இராஜதந்திர நகரமாக மாற்றியது. துரித கதியில் மகோன்னத வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது என்று செல்வதே பொருத்தம்.
ஏனெனில், சமாதான ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சிப் பகுதியெங்கும் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் வேகமும் அதன் வளர்ச்சியும் சர்வதேச இராஜதந்திரிகளை வியப்புக்குள்ளாக்கியது.
இதன் வெளிப்பாடுதான் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் "இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் குறுகிய சில மாதங்களிலேயே வன்னியின் எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனக் குறிப்பிட்டமையாகும்.
இதிலிருந்து கிளிநொச்சியின் வளர்ச்சியின் போக்கினை நாம் உணரமுடியும். மீண்டெழுந்த கிளிநொச்சியின் துரதிஷ்டமோ என்னவோ, சமாதான உடன்படிக்கை முறிவும், கடந்த ஒன்றரை வருடங்களாக கிளிநொச்சியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் பல பரிமாணங்களைத் தாண்டி, 2008 டிசம்பர் 31 இல் பரந்தன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜனவரி 2 இல் கிளிநொச்சி நகரத்தினை இராணுவப் பிடிக்குள் மீண்டும் சிக்கவைத்துவிட்டது. இதற்கான போரின் மூலம் கிளிநொச்சி நகரம் அழிந்த நகரமாக மக்கள் அற்ற நகரமாக, பாழடைந்த நகரமாக மாற்றமடைந்து விட்டது.
கிளிநொச்சி நகரத்திற்கான படையெடுப்பானது 57 ஆவது டிவிசன், கூஊ1 படையணிகள் முறையே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.
படையினர் கடந்த மூன்று மாதங்களாக முட்டி மோதி பாரிய இழப்புக்களைச் சந்தித்து பரந்தனூடாக முன்னேறி, ஏ9 வீதியை இரண்டாகப் பிழந்து பெட்டியடித்து நிலைகொண்டு, கிளிநொச்சியை மூன்றுபக்கமும் சூழ்ந்து பரந்தனிலிருந்தும், அடம்பனிலிருந்தும், இரணைமடுச்சந்தியிலிருந்தும் மும்முனைகளில் நகர்ந்து கிளிநொச்சி நகரத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். இதன்மூலம் ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து பரந்தனுக்கு அப்பால் உமையாள்புரத்திற்கு அண்மைவரை ஏ9 வீதியையும், அதற்கு மேற்குப் புறமுள்ள மேற்கு வன்னியின் முழுப்பரப்பையும் படைகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன.
அத்துடன் கிழக்கு வன்னியின் மாங்குளத்திற்கும், முல்லைத்தீவுக்கும் இடையேயான ஏ34 வீதியின் தென்பகுதியாகிய கிழக்கு வன்னியின் தென்அரைப்பாகம் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. கிளிநொச்சி நகரத்தின் முழுப்பகுதியும் இராணுவப் பிடியில் அகப்பட்டதோடு பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதியின் இரண்டாம் மைல்கல்லுக்கு அண்மைவரை படையினர் அண்மித்திருக்கின்றனர்.
கிளிநொச்சி நகரம் முழுவதும் இறுதிவரை சண்டையிட்ட புலிகளின் படையணிகள் தமது இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் படிப்படியாக பின்வாங்கி திருவையாற்றுப் பகுதியிலும் இரணைமடு குளக்கட்டுப் பகுதிலும், வடக்காக முரசுமோட்டை கண்டாவளை, ஊரியான் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு நேர் கோட்டில் புதிய முன்னரங்கப் பகுதியை நிறுவி நிலையெடுத்திருப்பதாக களமுனைத் தகவலிகளிலிருந்து அறியமுடிகின்றது. இதன்மூலம் இரணைமடுக்குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய முன்னரங்கப் பகுதியில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம்.
ஆனால், புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதனால், பரந்தனில் நிலைகொண்டிருக்கும் படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனையிறவு நோக்கி நகர உந்துவது இயல்பானதே. எனவே படைகள் உடனடியாக உமையாள்புரப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் முன்னரங்கை நோக்கி ஒரு பாய்ச்சல் சூட்டோடு சூடாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
கிளிநொச்சியின் வீழ்ச்சியானது முகமாலைப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் படையணிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே. ஏனெனில் முகமாலை பகுதிக்கான நேரடி வழங்கல் பாதை முடக்கப்பட்டு விட்டது. எனினும் முகமாலைப் பகுதிக்கான விநியோகங்களை கடல் வழியாகவோ அல்லது சுண்டிக்குளம் வழியாகவோ கடைசிவரை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.
எது எப்படியிருப்பினும் ஆனையிறவு நோக்கி படையினர் நகருகின்ற போது கிளாலி முகமாலைப் பகுதிலும் சரி, நாகர்கோவில் பகுதியிலும் சரி, சண்டையிடும் புலிகளின் படையணிகளுக்கு பெரும் நெருக்கஎகள் ஏற்படுவது தவிர்க் முடியாதது. ஏனெனில், முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசமும், சுண்டிக்குளம் தொடக்கம் நாகர்கோவில் வரையான வடமராட்சி கிழக்குப்பகுதியும் ஒடுங்கலான பிரதேசமாகவுள்ளது.
தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு பாக்கு வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி இருக்கின்றது. இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப்பதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டையைப் பிய்க்கத் தொடங்கிவிட்டனர். எனினும் முகமாலைப் பகுதியை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் தக்கவைப்பதற்கு புலிகள் முனைவர். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை முல்லைத்தீவு நோக்கிய நகர்வின் முனைப்பினை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.
59ஆவது டிவிசன் மணலாற்றுப் பகுதியிலிருந்து நகர்ந்து ஏ34 வீதியில் கூழாமுறிப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு முல்லைத்தீவின் நுழைவாயிலான நீராவிப்பிட்டி வரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததோடு, வீதியின் வடபுறம் நகர்ந்து வற்றாப்பளை கிராமத்தை முற்றுகையிடுவதோடு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கேப்பாபுலவு நோக்கி நகர்ந்து கேப்பாபுலவுக்குத் தெற்கே 3 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முல்லைத்தீவினுள் நுழைவதற்கு ஏ34 வீதியில் நீராவிப்பிட்டிக்கு அப்பால் நகர்வதற்கு புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டுவதனால் முல்லைத்தீவு நகரையும், முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் முற்றுகையிடும் நோக்கில் கேப்பாபுலவைத் தாண்டி நந்திக்கடலைச் சுற்றிச் சென்று ஏ35 வீதியை முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் ஊடறுப்பதன் மூலம் முல்லைத்தீவை வீழ்த்துகின்ற மூலோபாயத்தினை படைத்தரப்பு வகுத்திருப்பதாகவே தெரிகிறது.
கூழாமுறிப்புப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் படையினர் மேற்கு நோக்கி ஒட்டுசுட்டான் நோக்கியோ அல்லது கெருடமடு, பேராற்றுப் பகுதி நோக்கி நகர்ந்து ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுப்பதன் மூலம் ஒட்டுசுட்டானை வீழ்த்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளில் படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாங்குளம் பகுதியிலிருந்து நகர்ந்த படையினர் கரிப்பட்ட முறிப்புவரை நகர்ந்து அங்கிருந்து தெற்காக அம்பகாமம், பீலிக்குளம் வரை நகர்ந்து இரணைமடுக்குளத்தின் தென்புறத்தை அண்மித்து இரணைமடுக்குளத்தின் கிழக்குப் புறமாக பழைய கண்டிவீதிவழியே வட்டக்கச்சி நோக்கி நகர்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆகவே, மொத்தத்தில் வன்னிமீதான படைநடவடிக்கை என்பது பூநகரி ஊடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சி கைப்பற்றுதல், வன்னிமக்களை விடுவித்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான போர். என நோக்ங்கள் காலத்திற்குக் காலம் மாறி தற்போது புலிகளை அழித்தொழித்தல் என்ற கோசத்துடன் இன்று வன்னியில் மிகப்பெரும் மனிதப் பேரவல விளிம்பில் வந்து நிற்கிறது.
இராணுவம் மேற்கொண்ட படைநடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது இழப்புக்களை முடிந்தவரை குறைத்து படையினருக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தி, படைகளின் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து படிப்படியான தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுவந்த புலிகள் இயக்கம் இன்று கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் குறுகிய பகுதியினுள் தனது முழுப்படையணிகளையும் குவித்துள்ளது.
இந்நிலையில் மூன்று பக்கங்களிலும் இராணுவ நெருக்குதல்களை எதிர்கொண்டவாறு தற்காப்புத் தாக்குதல் வியூகத்தை கடைப்பிடிப்பதென்பது இனியும் தொடர முடியாது. வன்னியில் ஆனையிறவு நோக்கியமுனை, இரணைமடுக் குளப்பகுதி நோக்கியமுனை, கரிப்பட்டமுறிப்பு ஒட்டுசுட்டான், மற்றும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, ஆகிய முனை கள் நோக்கி சண்டைகள் விரிந்திருப்பதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற குறுகிய நிலப்பரப்பினுள் செறிந்திருக்கும் ஒட்டு மொத்த வன்னிமக்களின் அன்றாடப் பிரச்சி னைகள் ஒருபுறம், இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை முறியடிப்பதற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் பேவதில்லை.
எனவே வன்னிமீது போடப்பட்டிருக்கும் இறுக்கமான முடிச்சை அவிழ்ப்பதற்கும் இராணுவ முஸ்தீபை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரேவழி புலிகள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதலேயன்றி வேறெகுவும் இல்லை என்ற நிலைக்கு விடுதலைப் புலிகளை இட்டுச் சென்றுவிட்டது.
ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமா னவையும் அல்ல. இதற்கு உதாரணமாக கிளிநொச்சி நகரமே பல முறை கைமாறி விட்டதல்லவா? காலத்திற்குக் காலம் ஏற்பட்ட நெருக்கடிகள் இழப்புக்களையும் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் உத்வேகத்துடன் முன்னோக்கி தள்ளப்பட்டதுதான் வரலாறு.
ஆகவே கிளிநொச்சி வீழ்ந்தால் என்ன?. முல்லைத்தீவு பறிபோனால்தான் என்ன? வெற்றிகள் எப்போது ஒருவருக்குச் சொந்தமானதல்லவே. காலச்சக்கரம் சுழலும் காத்திருக்கும் தருணம் கைகூடும். களங்கள் கைமாறும். தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பாதையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு முன்னோக்கி நகர்ந்த்தபடும் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாகவே உள்ளது. எனவே விடுதலைப் போராட்டங்கள் முடிந்ததாகவோ அழிந்ததாகவோ உலக வரலாற்றில் நாம் எங்கேனும் கண்டதுண்டா? போராட்டம் என்பது தொடர்ச்சியானதே. அது முடிவில்லாததும் கூட.
Monday, December 8, 2008
WELCOME
This blog is connected with jaffnatamilar.blogspot.com.எமது இணையத்தளம் மேம்பாட்டு வேலைகளுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் புதுப்பொலிவுடன் உங்களுக்கு காட்சிதரும்.
அதுவரை எமது http://jaffnatamilar.blogspot.com/ இணைந்திருங்கள்
வெகுவிரைவில் புதுப்பொலிவுடன் உங்களுக்கு காட்சிதரும்.
அதுவரை எமது http://jaffnatamilar.blogspot.com/ இணைந்திருங்கள்
Subscribe to:
Comments (Atom)